பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. - கட்டுரை


பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.


வாசிப்பு என்பது அனைத்து வயதினருக்கும் அவசியமானதொன்றாகும். வாசிப்புப் பழக்கமானது ஒருவரின் அறிவு மட்டுமன்றி, தெளிவு, கிரகித்தல், உடனடியாகப் பதிலளித்தல், நாபிறழ்வின்றி சரளமாகக் கதைத்தல், எவர் முன்பும் பதிலளிக்கக் கூடிய துணிவு, சொல்லாண்மை, வசன உருவாக்கம் போன்ற குணங்களை வளர்க்கின்றது. வாசிப்புப் பழக்கத்தைப் புறம்தள்ளிப் போகின்றவர்கள் இலகுவாகச் சரளமாகக் கதைக்கவோ உடனடியாகப் பதிலளிக்கவோ சிரமப்படுகின்றார்கள். ஒரு விடயத்தை, ஒரு கவிதையை, ஒரு நீண்ட வசனத்தை எளிதில் கிரகித்து விளங்கிக் கொள்ளும் தன்மை குறைவாகக் காணப்படுவதற்கும் வாசிப்புப் பழக்கமின்மையே காரணமாகும்.

ஒரு பிள்ளை கருவிலிருக்கும் போதே தாய் நல்ல புத்தகங்களை வாசிப்பது பயனுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு பிள்ளையின் வாசிப்புப் பழக்கமானது அப்பிள்ளையின் பெற்றோர்களிலேயே தங்கியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தினைச் சிறுபராயத்தில் இருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பிள்ளையின் வாசிப்புப் பழக்கத்தினை அதிகரித்துக் கொள்வதற்கு / உருவாக்கிக் கொள்வதற்குப் பெற்றோர்கள் பல்வேறு உத்திகளைக் கையாளலாம்.
1. சிறு பராயத்திலிருந்தே பிள்ளைகளைச் சுற்றி புத்தகங்கள் இருக்குமாறு சூழலை ஏற்படுத்தல் வேண்டும். படிக்கும் இடத்தில் மட்டும் என்றல்லாது படுக்கையறையில், விளையாடும் இடத்தில், தொலைக்காட்சி பார்க்கும் இடத்தில் என்று வீட்டின் அனைத்து இடங்களிலும் பிள்ளைகளுக்கு எட்டக்கூடிய இடத்தில் புத்தகங்களை வைக்க வேண்டும்.    

2. பிள்ளைகளுக்குப் பிடித்த கதைகள், சுவாரஸ்யமான தகவல்களைக் கொண்ட புத்தகங்கள், புதிர் விளையாட்டுக்களைக் கொண்ட புத்தகங்கள் எனப் பிள்ளைகளின் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய வகையில் புத்தகங்களைத் தெரிவு செய்து பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

3. பிள்ளையின் வயதுக்கேற்றாற் போல் புத்தகங்களைக் கொடுக்க வேண்டும். பிள்ளையின் வயதுக்குக் கடினமான புத்தகங்களைப் பிள்ளைகள் படிக்கும் போது அதன் கடினத்தன்மையினால் வாசிப்பில் இருக்கும் ஆர்வம் அடியோடு இல்லாமல் போய்விடும்.

4. சிறுவயதிலிருந்தே நூலகத்திற்கு அழைத்துச் செல்லல் வேண்டும். நூலகத்தில் புத்தகங்களை எடுத்துப் பக்குவமாக வீட்டில் வைத்திருந்து மீளக் கொடுக்கும் பழக்கத்தினை ஏற்படுத்தினால் புத்தகங்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற உணர்வு வளரும்.

5. தினமும் 30 நிமிடங்களாவது நேரம் ஒதுக்கி பெற்றோர்களும் சேர்ந்து பிள்ளைகளுடன் வாசிக்க வேண்டும். தினமும் அவ்வாறு கட்டாயமாகச் செய்து வரும்போது நாளடைவில் பிள்ளைகளால் தினமும் வாசிக்காமல் இருக்க முடியாத நிலமை ஏற்படும்.

6. வாகனங்களில் (மகிழுந்து, பேருந்து, தொடருந்து) பயணிக்கும் போது பெற்றோர்கள் பிள்ளைகள் விரும்பி வாசிக்கும் புத்தகங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் பிள்ளைகளின் வாசிப்புத்திறனை வளர்த்துவிட முடியும். பொதுவாகப் பெற்றோர்கள் அதிகளவு ஈடுபாட்டுடன் இருக்கும் விடயங்களிலேயே பிள்ளைகளுக்கும் ஈடுபாடு வரும். ஆகையால் பிள்ளைகளின் முன்னால் பெற்றோர்கள் தொலைபேசியுடன் அதிக நேரத்தை வீணடிக்காது புத்தகங்களில் தம் கனவத்தைச் செலுத்துவார்களாயின் பிள்ளைகளும் அதே பழக்கத்தினைக் கடைப்பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

சிறுவயதிலிருந்தே வாசிப்பினைப் பழக்கமாக்கிக் கொண்டு வரும் பிள்ளைகள் ஆளுமைத்திறன் மிக்கவர்களாக மிளிர்வார்கள். அவர்களால் பெரியவர்களின் பேச்சுக்கள், தத்துவங்கள், கவிதைகள், சிக்கலான வசனங்கள், சிலேடைப் பேச்சுக்கள் போன்றவற்றை உடனடியாக விளங்கிக்கொள்ள முடியும். 'சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து' என வள்ளுவர் கூறியது போல் மற்றர்கள் வெல்லமுடியாதவாறு புத்திசாலித்தனமான பதில்களைக் கூற வல்லவர்களாய் உருவாகுவார்கள்.

பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்கும் போது பொதுப்படைத் தன்மையுடன் செயற்படுதல் அவசியமானதாகும். சோசலிசம், கம்யூனிசம், நாத்திகம், ஆன்மீகவாதம் என ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொரு கொள்கைகளை உடையவர்களாக இருப்பினும் ஒரு போதும் பெற்றோர்கள் தங்கள் கொள்கைகளைக் கடத்தும் விதத்தில் புத்தகங்களை வாங்கிக் குவிக்கக் கூடாது. 'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு' என்ற குறளின் பொருளினைத் தெளிவுபடுத்த வேண்டியது மட்டுமே பெற்றோர்களின் கடமையாகும். பிள்ளைகள் தங்கள் தெளிவினைக் கொண்டு புறந்தள்ள வேண்டியதைப் புறந்தள்ளிப் பின்பற்ற வேண்டியதைப் பின்பற்றுவார்கள். அதைவிடுத்து ஆன்மீகவாதி பிள்ளைக்கு மதத்தைத் திணிப்பதாலோ அரசியல்வாதி தன் பிள்ளைக்கு அரசியலைத் திணிப்பதாலோ பகுத்தறியும் தன்மை கொண்ட பிள்ளைகளை உருவாக்க முடியாது.

வாசிப்புப் பழக்கத்தினை பிள்ளைகளுக்கு ஏற்படுத்த வேண்டியது பெற்றோர்களின் இன்றியமையாத கடமையென்பதைப் பெற்றோர்கள் தெளிவாகப் புரிந்து செயற்படும் போது பகுத்தறியும் தன்மைகொண்ட சிறந்த பிள்ளைகளை ஒவ்வொரு பெற்றோரும் உருவாக்க முடியும். பிள்ளைகளைப் படிக்கச் சொல்லி அறைக்குள் அனுப்பிவிட்டு தொலைக்காட்சியில் நாடகம் பார்க்கும் பெற்றோர்கள் தங்கள் கேவலமான செயலை முதலில் திருத்திக் கொள்ளாவிடின் தம் பிள்ளைகளினைச் சிறந்த முறையில் வளர்த்தெடுக்க முடியாதென்பதை உணர வேண்டும். இன்று எமது சமூகத்தில் மேலே குறிப்பிட்டவாறு உத்திகளைப் பயன்படுத்திக் குடும்பமாச் சேர்ந்து பிள்ளையின் கல்வியை, வாசிப்பை மேம்படுத்தும் குடும்பங்கள் 10 விழுக்காடு கூட இல்லை என்பதே மிகவும் கவலையானதொரு விடயம். அடுத்தநாள் வைபவத்துக்குப் புடவை தெரிவு செய்யும் போது வீட்டில் அனைவரும் குழுமியிருப்பது போல் தினமும் பிள்ளைகளுடன் கல்விக்காகப் பெற்றோர்கள் குழுமி இருப்பார்களேயானால் நிச்சயமாகச் சிறந்த பிள்ளைகளை உருவாக்க முடியும்.

நன்றி.

Comments

Popular posts from this blog

01.10.2018 To 22.10.2018

Post -30

Post - 27